விமானங்களில் தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள் - பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து விமான நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு!

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டி.ஜி.சி.ஏ) விமான நிறுவனங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
விமானங்களில் தொடரும் தொழில்நுட்ப கோளாறுகள் - பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து விமான நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு!
Published on

புதுடெல்லி,

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டி.ஜி.சி.ஏ) விமான நிறுவனங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சிண்டியா நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டத்துக்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் 19 முதல், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில், கடந்த 24 நாள்களில் 9 முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பல்வேறு விமானங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டன.

இதனையடுத்து, இத்தகைய தொடர் கோளாறுகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இண்டிகோவின் ஷார்ஜா-ஐதராபாத் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல, கடந்த சனிக்கிழமை இரவு, ஏர் இந்தியா கோழிக்கோடு-துபாய் விமானம் மஸ்கட் நோக்கி திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சம்பவ இடங்களில் நடைபெற்ற சோதனைகளுக்குப் பிறகு, விமானங்களில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தையும் டிஜிசிஏ தற்போது விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இனி அனைத்து விமானங்களும் சான்றளிக்கப்பட்ட ஊழியர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே புறப்பட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.

அதன்படி, பேஸ் ஸ்டேஷன் (அடிப்படை நிலையம்) மற்றும் டிரான்ஸிட் (போக்குவரத்து) நிலையங்களில் இருக்கும் ஒரு விமானம், புறப்படுவதற்கு முன், ஊழியர்களால் சான்றளிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்படும்.

தங்கள் நிறுவனத்திடம் இருந்து முறையான அங்கீகாரத்துடன் "விமானப் பராமரிப்புப் பொறியாளர் பி1/பி2 உரிமம்" என்ற உரிமத்தை பெற்ற ஒரு ஊழியர் சான்றளிக்க வேண்டும்.

அத்தகைய என்ஜினியர்கள் இல்லாதபட்சத்தில், அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் வெகு விரைவில் கட்டாயம் நியமித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அவர்களை விமானங்களில் பயணத்தின்போது உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து விமான நிறுவனங்களும் ஜூலை 28ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com