

மும்பை,
வங்கிகளில் ரூ. 50 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்ததவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பொதுமக்கள் மத்தியில் வெளியிடுங்கள் என நிதி அமைச்சகம், மத்திய புள்ளியல்துறை மற்றும் திட்ட அமலாக்கம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் போன்று சிறிய அளவு தொகையை கடன்பெற்று திரும்ப செலுத்த முடியாத நிலையில் அவர்களுடைய பெயரை பொதுதளத்தில் வெளியிடும் போது, ரூ. 50 கோடிக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் இருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதையும் மத்திய தகவல் ஆணையர் சிறீதர் ஆச்சார்யலு குறிப்பிட்டுள்ளார்.
50 கோடிக்கு மேலாக கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்த தவறியவர்களுக்கு, வட்டி தள்ளுபடி, பல சலுகைகள் வழங்கப்படுகிறது மற்றும் அவர்களது புகழை பாதுகாப்பதில் பெயர் மறைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார் சிறீதர் ஆச்சார்யலு.
மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவில், கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத அவமானத்தில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் தாய் போன்று மதித்த விளைநிலத்தில் உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் 7000 பணக்காரர்களை போன்று சொந்த நாட்டைவிட்டு ஓடவில்லை. ஆனால், மெத்தப்படித்த, தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் நாட்டை ஏமாற்றி வருகிறார்கள் என காட்டமாக கூறியுள்ளது.
ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பி செலுத்தாவர்கள் பெயர்களையும் வெளியிட வேண்டும். கொள்கைகளை வகுக்கும்போதும், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும் அனைத்து துறைகளும் அது குறித்த விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும். பொதுமக்களின் பணத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது கடமையாகும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.