நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் நுழைவுத்தேர்வை நடத்த அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஆகியவற்றை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்தலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து கடந்த 17-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஷ்கார், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 6 மாநில அரசுகளின் சார்பிலும், புதுச்சேரி அரசு கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன், பா.ம.க. செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி ஆகியோர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மறுஆய்வு மனுக்களை திறந்த அமர் வில் விசாரிக்குமாறும் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை திறந்த அமர்வில் நடைபெறாமல், வக்கீல்கள் மற்றும் மனுதாரர்கள் பங்கேற்பு ஏதும் இல்லாமல் நீதிபதிகள் அறையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். அதன்படி நேற்று இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள், முதலில் மறுஆய்வு மனுக்களை திறந்த அமர்வில் விசாரிக்க கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

அதன்பிறகு மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில், இந்த மறுஆய்வு மனுக்கள் மற்றும் அவற்றுடன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பார்வையிட்டோம். இந்த மனுக்களை விசாரிக்க முகாந்திரம் எதுவும் இல்லை. எனவே இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com