

புதுடெல்லி,
டெல்லியின் கேரா கிராமத்தில் வசித்து வருபவர்கள் சந்தீப் சண்டோலியா மற்றும் விக்கி. இந்த இரு குடும்பத்தினர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில், விக்கி வீட்டுக்கு பக்கத்தில் சந்தீப்பின் குடும்பத்தினர் பன்றி வளர்த்ததில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் மீது போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் இரு தரப்பினர் இடையேயும் மோதல் ஏற்பட்டது. இதன்பின் அவர்களை சமரசப்படுத்தி, தெருவில் இருந்து வெளியேற செய்துள்ளனர்.
இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில் போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில், கேரா கிராமவாசிகளான விகாஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் தோள் பகுதியில் காயமடைந்த விகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்து உள்ளார். சுரேசுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் இருவரும் சந்தீப்பின் உறவினர்கள் ஆவர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.