

ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ.வை கிராமவாசிகள் கல்வீசி தாக்கி அடித்து கொன்ற பரபரப்பு சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அடர்சிங் பதனா, பரத்பூர் மாவட்டத்தில் போந்தா கிராமத்தில் கல்குவாரி நடத்தி வந்தார். எனினும், உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் கடந்த ஓராண்டாக மூடிக்கிடந்தது.
இந்நிலையில், இதனை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமவாசிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அடர்சிங், 40 முதல் 50 பேரை அழைத்து கொண்டு கல்குவாரிக்கு சென்றார். அவருடன் உதவியாளர் ககன் சர்மாவும் சென்றார். அப்போது, அவருக்கும், கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு முற்றவே கிராமத்தினர் கற்களை வீசி தாக்கினர். தவிர கம்புகளால் அடர்சிங் மற்றும் அவரது உதவியாளரை தாக்கினர்.
இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முன்னாள் எம்.எல்.ஏ. அடர்சிங் பலியானார். ககன் சர்மாவுக்கு பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வன்முறை பரவாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.