இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி... பதவியேற்ற 2 நாட்களில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.

மனசாட்சிக்கு எதிராக செயல்பட முடியாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி... பதவியேற்ற 2 நாட்களில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசியல் களத்தில், பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்படுபவர் ராமலிங்க ரெட்டி(வயது 73). இவர் பெங்களூருவில் உள்ள பி.டி.எம். லே அவுட் தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இதற்கு முன்பு அவர் கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை மந்திரியாகவும், உள்துறை மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த புதன்கிழமை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 13 மந்திரிகளுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. அதன்படி பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான இலாகா ராமலிங்க ரெட்டிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ராமலிங்க ரெட்டி இன்று தனது மந்திரி பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“மனசாட்சிக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது என்பதால், எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த அவமானத்தை என்னால் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள முடியும். மேலும் எனக்கு வேறு என்ன வழிகள் இருக்கின்றன?

கட்சி தலைமை என்னை இரண்டு முறை அழைத்து, பெங்களூரு மேம்பாட்டுத் துறையை எனக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இறுதியில் அது வேறு ஒருவருக்குச் சென்றுவிட்டது. அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனவே, இன்று நான் ராஜினாமா செய்கிறேன்.

நான் சித்தராமையாவிடம் பெங்களூரு மேம்பாட்டுத் துறையை ஒருபோதும் கேட்கவில்லை. அவரே முன்வந்து அதனை வழங்கினார். என்னை மந்திரியாக்குமாறு நான் அவரிடம் ஒருபோதும் கேட்கவில்லை. நான் மேலிடத்தை ஒருபோதும் அணுகவில்லை.

எனக்கு சித்தராமையா மீதோ, சிவகுமார் மீதோ, கார்கே மீதோ, அல்லது கட்சி மேலிடம் மீதோ எந்த கோபமும் இல்லை. நான் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன். நான் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவே தொடர்வேன். அதில் மாற்று எண்ணம் என்பது கிடையாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com