கர்நாடக பாடநூல் குழு கலைப்பு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தின் சமூக சிந்தனையாளர் என்று வர்ணிக்கப்படும் பசவண்ணரின் வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப்புத்தகங்களில் நீக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையில் கர்நாடக பாடநூல் குழு கலைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டார். மேலும் பள்ளி பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
கர்நாடக பாடநூல் குழு கலைப்பு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
Published on

பெங்களூரு:

பாடநூல் குழு தலைவருக்கு எதிப்பு

கர்நாடக பாடநூல் குழு தலைவராக இருந்து வருபவர் ரோகித் சக்ரதீர்த்த. இவரது தலைமையிலான குழுவினர், பள்ளிகளுக்கான மாநில அரசின் பாடத்திட்டத்தை வகுத்து வந்தனர். இந்த நிலையில் இவர், தேசியகவி குவெம்பு பற்றி சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு இருந்தார். அது குவெம்புவை அவமதிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கர்நாடக பாடநூல் குழு தலைவர் ரோகித் சக்ரதீர்த்தவுக்கு எதிராக இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரோகித் சக்ரதீர்த்த மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பள்ளி பாடபுத்தகத்தில் பசவண்ணர் சம்பந்தப்பட்ட கருத்துகள், அவரது வரலாற்றில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் குற்றச்சாட்டு கூறின. மேலும் கர்நாடகத்தின் சமூக சிந்தனையாளர் என்று வர்ணிக்கப்படும் பசவண்ணரின் வாழ்க்கை வரலாறும் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசுக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது. துமகூருவில் உள்ள அவரது வீட்டையும் தேசிய மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டாகள்.

மந்திரியுடன் ஆலோசனை

இந்த விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக ரோகித் சக்ரதீர்த்தவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம், பசவண்ணர் குறித்த விவகாரம் குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான பாடநூல் குழுவை கலைப்பது என்றும், பசவண்ணர் குறித்த பாடத்தில் திருத்தம் செய்யவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு எடுத்தார். இதனை பி.சி.நாகேசும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

பாடநூல் குழு கலைப்பு

கர்நாடக பாடப்புத்தகங்களில் இருக்கும் சில பிரச்சினைகள் குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசுடன், நானே ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனையின் போது ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான கர்நாடக பாடநூல் குழு கலைக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக பாடநூல் குழு கலைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் காலம் முடிந்து விட்டது. இதன் காரணமாக கர்நாடக பாடநூலுக்கு புதிய குழுவை அமைக்கப்படாது.

அதுபோன்ற எண்ணமும் அரசிடம் இல்லை. காநாடக பாடபுத்தகங்களில் இருக்கும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும்படி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். கர்நாடக பாடபுத்தகங்களில் பசவண்ணர் பற்றி இருக்கும் கருத்துகள் தொடர்பாக சாணேஹள்ளி மடாதிபதி சில அதிருப்திகளை தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது உண்மை தான்.

மாணவர்களுக்கு தொந்தரவு...

ஆனால் பாடப்புத்தக்கத்தில் இருப்பது அனைத்தும் தவறாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக சாணேஹள்ளி மடாதிபதியை நானே நேரில் சந்தித்து பேசவும் தயாராக உள்ளேன். 2015-ம் ஆண்டு கர்நாடக பாடநூல் குழு தலைவராக இருந்த பரகூரு ராமசந்திரா, பாடபுத்தகங்களில் எந்த மாதிரியான தகவல்களை கூறி இருந்தாரோ?, அதுவே தற்போதும் தொடர்ந்து இருக்கிறது. அப்போது பசவண்ணருக்கு எதிராக கருத்துகள் இருப்பதாக கூறி யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தற்போது மட்டும் எதிப்பு தெரிவிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாடபுத்தக்கத்தில் இடம் பெற்றுள்ள பசவண்ணர் குறித்த கருத்துகளில் திருத்தம் செய்யப்படும். பாடபுத்தகங்களில் சில பிரச்சினைகள் இருப்பது மேல் நோட்டமாக தெரியவந்துள்ளது. அது சரி செய்யப்படும். இதற்கு சிறிது காலஅவகாசம் தேவைப்படும். தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் பாடபுத்தகங்களில் இருக்கும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு, திரும்ப வழங்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com