காங்கிரஸ் மீது திவ்யா ஸ்பந்தனா அப்செட்! வேலையை புறக்கணித்ததாக தகவல்

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா, கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் மீது திவ்யா ஸ்பந்தனா அப்செட்! வேலையை புறக்கணித்ததாக தகவல்
Published on

பெங்களூரு,

காங்கிரஸில் வேகமாக வளர்ந்த தலைவர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா. தென்னிந்திய மொழி படங்களில் நடித்துவந்த போதே திடீரென அரசியலில் குதித்த திவ்யா ஸ்பந்தனா, காங்கிரஸ் சார்பில் 2013-ம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாண்டியா தொகுதியின் எம்.பி. ஆனார். 2014 தேர்தலில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் காங்கிரஸில் அசைக்கமுடியாத இடத்தை பிடிக்கும் வகையில் அவருடைய வளர்ச்சி காணப்பட்டது. எதிர்க்கட்சிகளின் செயலை பட்டியலிட்டு பதிலடி கொடுப்பதை வழக்கமாக கொண்டார். எல்லோரையும் எளிதாக நெருங்கும் வகையில் மிகவும் நகைச்சுவையுடனும் தகவல்களை பதிவிடுவார். அவருடைய ரசிகர் பட்டாளம், அரசியல் கட்சியினர் என அவரை டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பிரதமர் மோடி முதல் பா.ஜனதா தலைவர்கள் யாரையும் விடுவது கிடையாது திவ்யா, அதிரடி பதிலடிகளை கொடுப்பார்.

2019 மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவிலும் முக்கிய நபராக இடம்பெற்றார். சமூக ஊடகப்பிரிவு தலைவராக திவ்யா ஸ்பந்தனா இருந்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்டு சர்ச்சைக்களை தனதாக்கியவர்.

இப்போது காங்கிரஸ் கட்சியின் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், பணியை புறக்கணிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வாவின் மகன் நிகில் ஆல்வாவிற்கு திவ்யாவின் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இதனால் அவர் அப்செட் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் பேசியதாகவும், திவ்யாவின் பணி குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர் என என் டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தியின் டுவிட்டரில் கையாளும் நிகில் ஆல்வா, முக்கியமான பணியை எடுத்துக்கொண்டதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். என்னால் வதந்திகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது, நான் வெளிநாட்டில் உள்ளேன், என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்டு திவ்யா வெளியிட்ட செய்தியால் ராகுல் காந்தி அப்செட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது திவ்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் புகைப்படத்தை மாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com