

புதுடெல்லி
தீபாவளி பண்டிகை மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய் என காங்கிரஸ் எம்.பி. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மக்களவை தொகுதிக்கான காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, தீபாவளியும், காற்று மாசுபாடும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நோய்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த சிக்கலை அரசால் மட்டுமே எதிர்கொள்ள முடியாது என்று கூறிய அவர், பொதுமக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுபற்றி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறும்போது, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக சனாதன தர்ம அவமதிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்காக காங்கிரஸ் கட்சி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
தீபாவளி பண்டிகை ஒரு வியாதி அல்ல. அது மகிழ்ச்சிக்கான பண்டிகை என்றார். காங்கிரஸ் கட்சி அவரை பதவி நீக்கம் செய்யும் என நம்புகிறேன் என்றார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே பேசும்போது, தீபாவளி பண்டிகையை ஈத் பண்டிகையுடன் ஒப்பிட்டு பேசினார். அவர் பேசும்போது, தீபாவளி பண்டிகை என்பது மகிழ்ச்சியின் ஈத் போன்றது. நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான பண்டிகையாகும். இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த பண்டிகை மக்களை ஒன்றிணைக்கிறது. உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை சந்திக்க வாய்ப்பளிக்கிறது என்று கூறினார்.
மேலும், நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்பவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கார்கேவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தீபாவளியை மகிழ்ச்சியின் ஈத் என அழைக்கிறார். தீபாவளி பண்டிகையின்போது கூட காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலை பற்றியே சிந்திக்கிறது. காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்துக்கு எதிரானது என்று விமர்சித்துள்ளார்.
பா.ஜ.க. எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறுகையில், காங்கிரஸ் கட்சி பாபர் மீது தொடர்ந்து அனுதாபம் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.இதுகுறித்து அவர் கூறுகையில், அப்போதும் காங்கிரஸ் கட்சியின் இதயத்தில் பாபர் இருந்தார். இப்போதும் அவர் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது என்று விமர்சனம் வெளியிட்டார்.