கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள டி.கே.சிவக்குமாருக்கு விருந்து வைத்த சித்தராமையா

கர்நாடக முதல்-மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்தார்.
கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள டி.கே.சிவக்குமாருக்கு விருந்து வைத்த சித்தராமையா
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி கடந்த 2023-ம் ஆண்டு அமைந்தது. அந்த நேரத்தில் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தை விட முதல்-மந்திரி பதவியில் சித்தராமையா கூடுதலாக 6 மாதங்கள் நீடிக்க காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தது.

இதையடுத்து சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து தற்போது 3 ஆண்டுகள் ஆகிறது. ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் டி.கே.சிவக்குமார் கோரிக்கையை முன்வைத்தார். 5 மாநில தேர்தல் முடிவடைந்த பிறகு இதுகுறித்து தீர்மானிக்கப்படும் என்று அவரிடம் கட்சி மேலிடம் உறுதியளித்து இருந்தது.

அதன்படி முதல்-மந்திரி சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவருடன் ராகுல்காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். இதில் ராகுல் காந்தி, நீங்கள் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக் கொடுப்பதாக உறுதியளித்தீர்கள். ஆனால் உங்களுக்கு அதை விட கூடுதலாக 6 மாதங்கள் வழங்கியுள்ளோம். அதனால் நீங்கள் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆக வழிவிட வேண்டும். உங்கள் மகனுக்கு உரிய பதவி வழங்குகிறோம். உங்களையும் உரிய மரியாதையுடன் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்' என்று கூறியதாக சொல்லப்படு கிறது..

ராஜினாமா

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு அனைத்து மந்திரிகளுக்கும் காலை உணவு விருந்து கூட்டத்தை தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் தனது ராஜினாமா முடிவை அவர் மந்திரிகளிடம் அறிவித்தார்.

காலை உணவு விருந்து

முன்னதாக பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரி இல்லத்தில் நடைபெற்ற காலை உணவு விருந்தின்போது, ​​கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். மேலும், துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார், முதல்-மந்திரி சித்தராமையாவின் கால்களைத் தொட்டு வணங்கினார்.

இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் மக்கள் மாளிகையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்திக்கும் முதல்-மந்திரி சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகு கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இதில் கட்சியின் புதிய சட்டசபை குழு தலைவராக அதாவது முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் அடுத்த ஓரிரு நாட்களில் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

டி.கே.சிவக்குமாரின் மந்திரிசபையில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு இடம் கிடைக்க உள்ளது. அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி தலித், பழங்குடியினர், லிங்காயத் சமூகங்களுக்கும் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com