

பனாஜி,
கோவாவில் சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு வடக்கு கோவா மாவட்ட மாஜிஸ்திரேட் போர்வோரிமில் உள்ள சட்டமன்ற வளாகம் மற்றும் பனாஜி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு அருகே 144 தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தடை உத்தரவு வருகிற ஜூலை 11-ம் தேதி காலை 10 மணி முதல் கோவாவில் சட்டசபை கூட்டத்தொடர் முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்வோரிமில் உள்ள சட்டசபை வளாகம் மற்றும் பனாஜி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பொது இடங்கள் மற்றும் சாலைகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக செல்வதற்கும், ஊர்வலங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள், லத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்கும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாஜிஸ்திரேட் அல்லது கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று விசேஷ நிகழ்வுகள், இறுதி ஊர்வலங்கள் போன்றவை நடத்தலாம் என்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.