

லக்னோ,
உத்த பிரதேச மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட கங்கை விரைவுச் சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். மீரட் நகரில் இருந்து பிரயாக்ராஜ் வரை 594 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலையானது, அந்த மாநிலத்தின் மிக நீளமான சாலை ஆகும்.
இது உத்தர பிரதேசத்தின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள 12 மாவட்டங்களை இணைக்கிறது. மேலும், பயண நேரத்தை வெகுவாக குறைப்பதோடு, உத்தர பிரதேச மற்றும் டெல்லி உடனான இணைப்பையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரைவுச்சாலையின் திறப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பேசுகையில், “கங்கை நதி உயிர் ஆதாரமாக திகழ்வது போலவே, இந்த விரைவுச் சாலையும் உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும்.
மேற்கு வங்கத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களித்தது நாட்டின் ஜனநாயகத்திற்கு உன்னதமான அடையாளம். குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் 85 சதவீதம் வரையிலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 5 மாநில தேர்தல் முடிவுகளும் வந்தபின் பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றியை பெறும் என உறுதியாக நம்புகிறேன்.
உத்தர பிரதேசத்திற்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. உத்தர பிரதேசத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் தி.மு.க. அரசியல் ஆதாயம் தேடுகிறது. உத்தர பிரதேசத்திற்கு அதிக தொகுதிகள் கிடைப்பதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியும் தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது” என்று கூறினார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்து பேசியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.