முதல்-அமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிராக திமுக மனு: இன்று விசாரணை

கரூர் வழக்கு விசாரணைக்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார்.
முதல்-அமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிராக திமுக மனு: இன்று விசாரணை
Published on

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிராக திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

கரூர் நெரிசல் விவகாரம்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்த னர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணமாக விஜய் நேரில் சென்று ஆறுதல் கூற இயலவில்லை. இருந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து தலா ரூ.20 லட்சம் த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டது.

சி.பி.ஐ. விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதி பதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து கரூரில் சம்பவம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். அதன் பின்னரும் சி.பி.ஐ. விசாரணை தொடருகிறது.

கரூர் பயணம்

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர், கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

திமுக இடையீட்டு மனு

இந்த நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக உள்ளது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

தடை விதிக்க வேண்டும்

இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழி காட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இன்று விசாரணை

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆமானுல்லா கான், ஷீல் நாகு அடங்கிய அமர்வு முன்பு மூத்த வக்கீல் ஹுஸேபா அகமதி ஆஜராகி, கரூரில் தமிழக அரசின் சார்பில் வருகிற 10-ந்தேதி திட்டமிடப்பட்டு உள்ள நிகழ்வை குறிப்பிட்டு, சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த வழக்கின் முடிவை பொறுத்தே. கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா? அல்லது சாதகமான பதில் வருமா? என்பது தெரியவரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com