தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூடாது : ஐகோர்ட்டு கிளை உத்தரவு

தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூடாது : ஐகோர்ட்டு கிளை உத்தரவு
Published on

மதுரை,

தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் தியான நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது.

இதற்கு கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோயில் என்ற சிறப்பை பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், இதுபோன்ற தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கை. நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 2017- ஆம் ஆண்டு யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர். ஆகவே, தஞ்சை பெரிய கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறி இருந்தார். விசாரணையை மேற்கொண்ட கோர்ட்டு, தடை விதித்தது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது தொல்லியல் துறை சார்பில், கோவில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று பெரிய கோவிலில் பஜனை நடத்த அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் தஞ்சை பெரிய கோவிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்து விடுவீர்களா? தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது அறநிலையத்துறை பரிந்துரைத்ததால் மட்டும் எப்படி அனுமதி வழங்கினீர்கள்?

நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தின் முழு வரைப்படத்தை பெற்ற பின்பு தான் அனுமதி வழங்கப்பட்டதா? என்று கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், இது ஏற்க தக்கதல்ல, தஞ்சை பெரிய கோவில் பாரம்பரியமானது என்பதால் நீதிமன்றம் தலையிடுகிறது என்று கூறியது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கூடாது என உத்தரவிட்டது. தஞ்சை கோவில் மிகவும் பாரம்பரியம் கொண்டது. கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. கோவில் பாரம்பரியத்தை காக்க வேண்டும். எனவே கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com