புதுவை முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுவையில் வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமியின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது.
புதுவை முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Published on

புதுவை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் அதிக அளவில் நடைபெறவில்லை.

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைக்கக் கூடாது, புதுவைக்கு மாநில அந்தஸ்து கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். இதனால் கூட்டணி முடிவில் இழுபறி நீடித்து வந்தது.இந்த நிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, நேற்று காலை புதுச்சேரி திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து, மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை தயார் நிலையில் வைத்திருந்தார். பின்னர் கதிர்காமம் முருகன் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு வேட்புமனுவை வைத்து சாமி கும்பிட்டு கையெழுத்திட்டார்.பின்னர் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்புமனுவை கோரிமேடு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திலும், மங்கலம் தொகுதிக்கான வேட்புமனுவை சாரம் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் அலுவலகத்திலும் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். வேட்புமனுவில் ரங்கசாமியின் சொத்து மதிப்பு விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, அவரது பெயரில் அசையும் சொத்து ரூ.21 கோடியே 25 லட்சமும், அசையா சொத்து ரூ.27 கோடியே 78 லட்சமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com