வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுப்பதா? மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதிப்போம் : கேரள முதல்–மந்திரி

வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுப்பது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதிப்போம் என கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.
வெளிநாட்டு நிதி உதவியை ஏற்க மறுப்பதா? மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதிப்போம் : கேரள முதல்–மந்திரி
Published on

திருவனந்தபுரம்,

பெருத்த மழை, வெள்ளத்தால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்தை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

வெளிநாடுகளும் நிதி உதவி வழங்க முன் வந்து உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்து உள்ளது. கத்தார் நாடு ரூ.35 கோடி நிதி உதவி தர முன் வந்து இருக்கிறது.

ஆனால் மத்திய அரசு இந்த நிதி உதவிகளை ஏற்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக 1 லட்சத்து 90 ஆயிரம் ஈரோவை (சுமார் ரூ.1 கோடியே 53 லட்சம்) இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்போவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்மந்திரி பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மழை, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்தில் ஒட்டு மொத்த உலகமும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன.

முதல்மந்திரி நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.318 கோடி வந்து உள்ளது. இதில் ரூ.146 கோடியை பல்வேறு மாநிலங்களும் தாராளமாக வழங்கி உள்ளன.

இது தவிர்த்து, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஷ்கார் மாநிலங்கள் உணவு தானியங்களையும் வழங்கி உள்ளன.

மாநிலம் முழுவதும் 3,314 முகாம்களில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 453 பேர் தங்கி இருக்கிறார்கள். மருந்து, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்கும், முகாம்களில் எல்லா வசதிகளும் கிடைப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக தேவைப்பட்டால் மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதிப்போம். இயற்கை பேரிடரின்போது வெளிநாடுகள் தாமாக முன் வந்து அளிக்கிற நிதி உதவியை ஏற்பதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் துயரங்களில் இருந்து மீண்டு வரவும், இயல்பு நிலைக்கு திரும்பவும் சிறப்பு நிதி உதவி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், மழை வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கு மாநிலம் தயார் நிலையில் இருந்தது பற்றியும் முதல்மந்திரி பினராயி விஜயன் விளக்கினார். அணைகள் திறப்பு குறித்து மக்களுக்கு தேவையான முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

1ந் தேதி முதல் 19ந் தேதி வரையில் கேரள மாநிலம், 758.6 மி.மீ. மழையைப் பெற்று உள்ளது என்றும், இது சராசரி மழை அளவை விட 164 சதவீதம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டு உள்ளனர்; பழுதுகளை சரிபார்க்கும் பணியில் மின் உதவியாளர்கள், பிளம்பர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com