சிகிச்சை பெற வந்த நோயாளியை கடுமையாக தாக்கிய டாக்டர் - சிம்லா மருத்துவமனையில் பரபரப்பு

டாக்டர் தாக்கியதில் நோயாளியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் காலியாக இருந்த நோயாளிகளுக்கான படுக்கை ஒன்றில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர், படுக்கையில் படுத்திருந்த நோயாளியிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நோயாளியை டாக்டர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நோயாளியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.
இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நோயாளி அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






