‘கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்துக்கான நிதியை தருவதில்லை’ - மத்திய அரசு மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு முறையாக விடுவிப்பது இல்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
‘கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்துக்கான நிதியை தருவதில்லை’ - மத்திய அரசு மீது காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் மிகவும் வறுமை நிலையில் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் (என்.ஒய்.ஏ.ஒய்.) குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 25-ந் தேதி அதிரடியாக அறிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதே நேரத்தில் மத்தியில் தற்போது ஆளும் பாரதீய ஜனதா கடுமையாக சாடி வருகிறது. ஆனால் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தை பாரதீய ஜனதா அரசு சரியாக அமல்படுத்துவதில்லை என்று காங்கிரஸ் புதிதாக குற்றம் சாட்டுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியும், மத்திய மந்திரிகளும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்க உள்ள குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை கிண்டல் செய்கின்றனர். ஆனால் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்கிறவர்களுக்கு வழங்க வேண்டிய கூலித்தொகைக்கான நிதியை ஒழுங்காக விடுவிப்பது இல்லை.

2019-20 நிதி ஆண்டில் இந்த திட்டத்தின் கீழான கூலியை மிகவும் குறைந்த அளவாக 2.16 சதவீதம் என நிர்ணயித்து உள்ளனர்.

இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்தின்கீழ் பணியாற்றுகிறவர்கள் 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கூலி உயர்வை பார்க்க முடியாது. கர்நாடகம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உயர்த்தப்பட்ட கூலிக்கான நிதி விடுவிக்கப்படவில்லை.

15 மாநிலங்களில் இந்த திட்டத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தினமும் ரூ.1 முதல் ரூ,.5 வரை மட்டுமே உயர்த்தப்படும்.

விவசாய கூலித்தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலிக்கு நிகராக இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறவர்களுக்கும் கூலி வழங்க மகேந்திர தேவ் குழு பரிந்துரை செய்தது. அதை மோடி அரசு நிராகரித்து இருப்பது, கிராமப்புற தொழிலாளர்கள் மீதான நேரடி தாக்குதல் ஆகும்.

கூடுதல் செயலாளர் நாகேஷ் சிங் தலைமையில் மோடி அரசு 2-வது குழுவை அமைத்தது. அந்தக்குழு விவசாய கூலித்தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலிக்கு நிகராக இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறவர்களுக்கும் கூலி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை. ஆனாலும்கூட, நுகர்வோர் பாதுகாப்பு விலை (கிராமப்புறம்) அடிப்படையில் ஆண்டுதோறும் கூலி உயர்த்தப்பட வேண்டும் என பரிந்துரைத்தது.

ஏழை, எளியோருக்காக உழைப்பதாக கூறி வந்த பாரதீய ஜனதா கட்சியினர் ஏழைத்தொழிலாளர்கள், குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை (என்.ஒய்.ஏ.ஒய்.) குறை கூறுகின்றனர். அவர்கள் தங்களது தொழில் கூட்டாளிகளின் நலன்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com