உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 42 சதவீதம் உயர்வு

கடந்த மாதத்தில், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 42 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 42 சதவீதம் உயர்வு
Published on

உள்நாட்டு விமான பயணிகள்

கொரோனா 2-வது அலை, பல்வேறு துறைகளைப் பாதித்ததைப் போல விமான போக்குவரத்து துறையையும் கடுமையாகப் பாதித்தது.2-வது அலை உச்சத்தில் இருந்த கடந்த மே மாதத்தில், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 63 சதவீதம் வரை குறைந்தது. தற்போது உள்நாட்டில் விமான பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக கூடிவருகிறது. தேவை அதிகரித்திருப்பதால், விமான பயணிகள் பயணிப்பதற்கான இருக்கை கட்டுப்பாட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக அதிகரித்து விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

விமானங்கள் எண்ணிக்கை

இந்நிலையில் கடன் தர மதிப்பீட்டு முகமையான இக்ரா நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், கடந்த ஜூன் மாதம் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 29 முதல் 30 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடந்த மே மாதத்தின் 19.8 லட்சம் பயணிகளுடன் ஒப்பிடும்போது 41 முதல் 42 சதவீத வளர்ச்சி ஆகும். விமான நிறுவனங்களின் இருக்கை கொள்ளளவும் கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடும்போது 46 சதவீதம் உயர்ந்துள்ளது. இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 14 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பிடத்தக்க உயர்வு

உள்நாட்டில் கடந்த மாதம் தினமும் சராசரியாக ஆயிரத்து 100 விமானங்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் 700, இந்த ஆண்டு மே மாதத்தின் 900 விமானங்களுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். அதேநேரம் கடந்த ஏப்ரலில் இயக்கப்பட்ட 2 ஆயிரம் விமானங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான். கடந்த மாதம் ஒரு விமானத்தின் சராசரி பயணிகள் எண்ணிக்கை 94 ஆகும். முந்தைய மே மாதத்தில் அது 77 பேராக இருந்தது என்று இக்ராவின் துணைத் தலைவர் கின்ஜால் ஷா தெரிவித்தார்.

மீண்டுவந்த போதும்...

உள்நாட்டு விமான போக்குவரத்து மீட்சி கண்டுவரும்போதும், தற்போது மக்கள் அவசியமான பயணங்களை மட்டும் மேற்கொள்வதாகவும், மாநிலங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, ஓய்வுக்காகவும், தொழில் தொடர்பாகவும் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கின்ஜால் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com