‘உள்நாட்டு சந்தை நுகர்வு நமது பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க உதவுகிறது’ - நிர்மலா சீதாராமன்

இந்திய ஏற்றுமதியாளர்கள் சவால்களுக்கு நடுவே புதிய சந்தைகளை கண்டறிந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
‘உள்நாட்டு சந்தை நுகர்வு நமது பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க உதவுகிறது’ - நிர்மலா சீதாராமன்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்ற எஸ்.பி.ஐ. வங்கி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“உள்நாட்டு சந்தைகளில் உருவாகும் நுகர்வு, நமது பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க உதவுகிறது. தற்போதும் கூட, இதுவே உலகில் மிக வேகமான வளர்ச்சியாக உள்ளது. நமது உள்நாட்டு உற்பத்தி, வேளாண் வளர்ச்சி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் ஆகிய துறைகளுக்கு நிலையான, கணிக்கக்கூடிய ஆதரவு வழங்கப்படாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை தொடர்வது கடினமாகிவிடும்.

அதே சமயம், ஏற்றுமதியும் மிக முக்கியமானது. அமெரிக்காவின் வரிகள் போன்ற பின்னடைவுகளுக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஏற்றுமதியாளர்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு நடுவே புதிய சந்தைகளை கண்டறிந்துள்ளனர்.

வங்கிகள் டிஜிட்டல் மற்றும் உலகமயமாகும்போது, ​​வாடிக்கையாளர்களுடனான நேரடித் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஐ.டி.பி.ஐ. வங்கியின் முதலீட்டு விலக்கல்(Disinvestment Process) செயல்முறை தொடர்ந்து நடைபெறும்.

எதிர்வரும் வாரங்களில், வங்கிகளுக்குள் அதிக முதலீடுகள் எங்கு செய்யப்பட வேண்டும், எந்த வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com