

புதுடெல்லி
இன்று மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தின்போது ஃபரூக் அப்துல்லா எங்கே என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலேவின் கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலிலும் வைக்கப்படவில்லை; அவர் தனது வீட்டில் தான் இருக்கிறார் என கூறினார்.
இந்த நிலையில் தனது வீட்டில் வைத்து பரூக் அப்துல்லா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் வீட்டுக் காவலில் கைது செய்யப்படவில்லை, எனது சொந்த விருப்பப்படி என் வீட்டிற்குள் தங்கியிருக்கிறேன் என்று உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் பொய் சொல்கிறது.
எனது மக்கள் சிறையில் அடைக்கப்படுகையில், எனது அரசு எரிக்கப்படும்போது, எனது சொந்த விருப்பப்படி நான் ஏன் என் வீட்டிற்குள் தங்குவேன்? இது நான் நம்பும் இந்தியா அல்ல. மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
முதுகில் குத்தாதீர்கள்! நெஞ்சில் சுடுங்கள்! ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை.
எனது மகன் ஒமர் அப்துல்லா சிறைவைக்கப்பட்டுள்ளார் என கூறினார்.