

அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முஸ்லிம் தரப்பினர் சிலர் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தாலும், மற்றொரு முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி தான் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், ராமர் கோவில் கட்டுவதை தான் ஆதரிப்பதாகவும் தொடர்ந்து கூறிவந்தார்.
இந்நிலையில் இக்பால் அன்சாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பு வழங்கி உள்ளதால் அதனை கட்டுவதற்கு தாமதிக்கக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களும் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்க வேண்டும். அதோடு அயோத்தியில் அகலமான சாலைகள், பக்தர்களுக்காக சிறந்த விருந்தினர் மாளிகைகள் மற்றும் இதர வசதிகளும் செய்துதரப்பட வேண்டும். அப்போதுதான் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ராமர் கோவிலை பார்ப்பதற்காக இங்கு வருவார்கள்.
ராமர் கோவிலில் இருந்து பக்தர்கள் சரயு நதியை பார்க்கும் வகையில் அந்த கோவில் கட்டப்பட வேண்டும். அயோத்தி ரெயில் நிலையத்தையும் ராமர் கோவில் வடிவிலேயே மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு இக்பால் அன்சாரி கூறினார்.