'அசைவ உணவு வேண்டாம்' - நொய்டா பள்ளியின் புதிய விதிமுறையால் சர்ச்சை

குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்ற நொய்டா பள்ளியின் புதிய விதிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'அசைவ உணவு வேண்டாம்' - நொய்டா பள்ளியின் புதிய விதிமுறையால் சர்ச்சை
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார்-132 பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், குழந்தைகளுக்கு டிபன் பாக்சில் அசைவ உணவுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அசைவ உணவுகளை அதிகாலையிலேயே சமைத்து டிபன் பாக்சில் வைத்து அனுப்புவதால், மதிய நேரத்திற்குள் அந்த உணவு கெட்டுப்போக வாய்ப்பிருப்பதாகவும், இதன் காரணமாகவே இத்தகைய விதிமுறை ஏற்படுத்தப்படுவதாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மேலும் இதை ஒரு கோரிக்கையாக மட்டுமே பெற்றோரிடம் முன்வைப்பதாகவும், சைவ உணவுகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பலதரப்பட்ட மாணவர் சமுதாயத்திற்கு மரியாதை அளிப்பதாகவும் இருக்கக் கூடும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நொய்டா பள்ளி நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் உணவு பழக்கவழக்கம் எப்படி மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை பாதிக்கும் என்று பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், முறையாக சமைக்காத, சேமிக்காத எந்த உணவாக இருந்தாலும் அது கெட்டுப்போகவே செய்யும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், பள்ளி நிர்வாகத்தின் புதிய விதிமுறைக்கு ஒரு தரப்பினரிடையே ஆதரவும் நிலவி வருகிறது. அதே போல், சைவ உணவுகளை சாப்பிட தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், அதை கட்டாயப்படுத்தக் கூடாது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நொய்டா கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி நிர்வாகத்தின் புதிய விதிமுறையில் பெற்றோருக்கு ஆட்சேபம் இருந்தால் அவர்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com