தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; மக்களவையில் சுகாதார மந்திரி வேண்டுகோள்

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று மக்களவையில் சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; மக்களவையில் சுகாதார மந்திரி வேண்டுகோள்
Published on

உண்மைகளைக் கூற விருப்பம்

நாடு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர போராடும் வேளையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தடுப்பூசிகள் தொடர்பான துணைக்கேள்விகளுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள பைசர் தடுப்பூசியை இந்தியாவில் கிடைக்கச்செய்வது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது.கொரோனா விவகாரத்திலும், தடுப்பூசி பிரச்சினையிலும் அரசியல் கூடாது. இதைப் பிரதமர் பல முறை கூறி விட்டார்.இந்த விவகாரத்தில் நானும் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் இதில் உண்மைகளைக் கூற விரும்புகிறேன். பிரதமர் மோடி இதுவரையில் மாநில அரசுகளுடனும், முதல்-மந்திரிகளுடனும் 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி உள்ளார்.

எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்கள்...

எதிர்க்கட்சிகள் ஆளுகிற சில மாநிலங்கள், சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் பட்டியலில் வருகிறது, மாநிலங்களையும் கலந்தாலோசித்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பிரச்சினை எழுப்பின.

பல மாநிலங்கள், சுகாதாரம் மாநில அரசுகளின் பட்டியலில் வருவதால், நாங்களும் தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டன. நாங்களும் டெண்டர் விட விரும்புகிறோம் என்றன. ஆனால் பிரதமர் மோடி, என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருகிறோம் என்று கூறினார்.அதன்படியே மாநிலங்கள் 25 சதவீத தடுப்பூசியையும், தனியார் ஆஸ்பத்திரிகள் 25 சதவீத தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. 25 சதவீத தடுப்பூசிகளுக்கு மாநிலங்கள் டெண்டர் விட்டன. நாங்கள் எல்லா உதவிகளும் செய்கிறோம் என்று கூறினோம். ஆனால்

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வினியோகஸ்தர்கள்தான் உள்ளனர். மத்திய அரசும் தடுப்பூசி வினியோகஸ்தர்களுடன் பேசி வருகிறது.பல மாநிலங்கள் உலகளாவிய டெண்டர்கள் விட்டன. 2 இந்திய நிறுவனங்கள்தான் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி உள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசியை புனே இந்திய சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன.

அமெரிக்க நிறுவனத்துடன் பேச்சு

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்துள்ளது. அனுமதியும் பெற்றிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன், பயாலஜிக்கல் இ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. தொழில்நுட்ப மாற்றம் தொடர்பான வேலைகள் தொடங்கி உள்ளன.பைசர் நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு பேசி வருகிறது. ஆனால் அந்த நிறுவனம் மாநிலங்களுடன் இணைந்து செயல்பட மாட்டோம்,

இந்திய அரசு எங்களுடன் பேசி வருகிறது என்று கூறி விட்டது. இன்றும்கூட அந்த நிறுவனத்துடன் தொழில்நுட்பக்குழு பேசுகிறது.மாநிலங்களுடன் நடத்திய கூட்டத்தின்போது, தங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று முதல்-மந்திரிகள் தெரிவித்தனர். மாநிலங்களைப் போல மத்திய அரசும் 25 சதவீத தடுப்பூசிகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.எனவே ஜூன் 21-ந் தேதி முதல் புதிய கொள்கை வந்துள்ளது. அதன்படி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

இணைந்து பணியாற்றுவோம்...

இதில் அரசியல் வருகிறது. ஆனால் இதில் அரசியல் கூடாது. 18 வயதான 100 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி போடுவதுதான் எங்கள் இலக்கு. நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது. இது அரசியலில் ஈடுபட வேண்டிய நேரம் அல்ல.குழப்பத்தை பரப்புகிறவர்கள் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இலவச தடுப்பூசி திட்டத்துடன் இணைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com