பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த எனது கணவருக்கு தியாகி அந்தஸ்து போதும்: மனைவி உருக்கம்

பஹல்காம் தாக்குதலில் தொழில் அதிபர் சுபம் திவேதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கான்பூர்,
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த இளம் தொழில் அதிபர் சுபம் திவேதி (31) தனது மனைவி கண்முன்னே துப்பாக்கி சூட்டில் பலியானார்.
சிமெண்டு வியாபாரம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த சுபம் திவேதிக்கு, அஷன்யா என்பவருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர் 9 பேருடன் ஒரு வார சுற்றுலா பயணமாக காஷ்மீருக்கு சென்றிருந்த நிலையில் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த தொழில் அதிபரின் மனைவி அஷன்யா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயங்கரவாதிகளை அரசாங்கம் ஒழிக்க வேண்டும். எனக்கு வேலையோ.. பணமோ.. வேண்டாம், எனது கணவருக்கு தியாகி அந்தஸ்து மட்டுமே போதும்; அதையே நான் விரும்புகிறேன்.
வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. கணவரின் நினைவாக அவரின் புகைப்படத்தையும், அவரது ஆடைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இந்த வலியை நான் சுமப்பேன். டயர் வெடிக்கும் சத்தமோ அல்லது பலத்த சத்தமோ கூட என்னை நடுங்க வைக்கிறது. தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளி வர முடியவில்லை. என் மீது யாரோ தாக்குதல் நடத்துவதுபோல உணர்கிறேன்.
தாக்குதலுக்கு பின்னால் உள்ள பயங்கரவாதிகள் மீது உறுதியான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மீண்டும் காஷ்மீருக்குச் செல்வீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "ஒருபோதும் இல்லை. ஒரு முறை கூட இல்லை" என்று கூறினார்.






