

புதுடெல்லி
இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்கும் விதத்தில் தினகரன் செயல்படுகிறார் அமைச்சர் சிவி சண்முகம் டெல்லியில் பேட்டி அளித்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்அமைச்சருமாக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சி இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்றும், கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சினையை தொடர்ந்து, அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கிவைத்தது.இதனையடுத்து, சசிகலா அணியும் உண்மையான அ.தி.மு.க. தாங்கள் தான் என்று உரிமை கொண்டாடியது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தனித்தனியாக லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், சசிகலா அணியில் இருந்த முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்தார். இதனால், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதித் தீர்ப்பை அக்டோபர் 31ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகள், அ.தி.மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை 13ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில், தினகரன் தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டதையடுத்து இதனைத் தொடர்ந்து, இம்மாதம் 13ந் தேதி நடைபெற இருந்த விசாரணையை 16ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் நடைபெறுகிறது. இதற்காக மாலை 3 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு இரு அணியினருக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி விசாரணை நடைபெறுகிரது. இதை தொடர்ந்து டெல்லியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உதயகுமார், எம்.எல்.ஏ. ரவி ஆகியோர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர் சிவி சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்கும் விதத்தில் தினகரன் செயல்படுகிறார். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் எதிர்வரும் தேர்தலை இரட்டை இலை சின்னத்தை சந்தித்து வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தன்னையும் ஒரு வாதியாக சேர்க்கக்கோரி ஏ.கே.ஜோசப் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு செய்து உள்ளார்.