

புதுடெல்லி,
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்தது. அதற்கு டவ்தே என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் பலத்த மழை பெய்தது.
டவ்தே புயல் நேற்று மிகவும் தீவிர புயலாக உருமாறியது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயலால், மும்பையில் நேற்று மணிக்கு 114 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறைக்காற்று வீசியது. கொங்கன் பகுதியில் புயல் தாக்குதலுக்கு 2 பேர் பலியானார்கள்.
புயல் தொடர்ந்து நகர்ந்து குஜராத் கடலோர பகுதியில் கரையை கடக்கிறது.
டவ்தே புயல் காரணமாக, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும், டாமன் டையு யூனியன் பிரதேசத்திலும் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, நேற்று மேற்கண்ட 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடனும், டாமன் டையு யூனியன் பிரதேச கவர்னருடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடந்தது.
புயல் தாக்குதலில் இருந்து பெருமளவிலான பாதிப்புகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். கொரோனா சிகிச்சை நடைபெறும் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு பாதிப்போ, ஆக்சிஜன், மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லாமலோ பார்த்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி அளித்தார். ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை ஆகியவை மீட்பு, நிவாரண பணியில் ஈடுபட தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தா.
இதுபோல், டவ்தே புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பல்வேறு அமைச்சகங்களுடன் மோடி கடந்த 15-ந் தேதி ஆலோசனை நடத்தினார்.