வரதட்சணை கொடுமை.. இளம்பெண் அடித்துக்கொலை? - போலீஸ் தீவிர விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வரதட்சணை கொடுமை.. இளம்பெண் அடித்துக்கொலை? - போலீஸ் தீவிர விசாரணை
Published on: 

துமகூரு [கர்நாடகா],

வரதட்சணை கொடுமைப்படுத்தி இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா? என கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவர் வீட்டிற்கு

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள ஒன்னகனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 24). இவருக்கும் துமகூரு மாவட்டம் எல்லாப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாகடியில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சுஷ்மிதா சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் எல்லாப்பூரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு திரும்பினார்.

தூக்கில் தொங்கினாரா..?

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென சுஷ்மிதாவின் கணவர் சீனிவாஸ், சுஷ்மிதாவின் குடும்பத்தினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, சுஷ்மிதா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் பதறியபடி ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு சுஷ்மிதா ஏற்கனவே இறந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சீனிவாஸ், தனது மனைவி சுஷ்மிதாவை அடித்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளதாக சுஷ்மிதாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

கணவரிடம் தீவிர விசாரணை

இதுகுறித்து எல்லாப்பூர் போலீசில் சுஷ்மிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எல்லாப்பூர் போலீசார், உயிரிழந்த சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வரதட்சணை கொடுமையால் சுஷ்மிதா தூக்கில் தொங்கினாரா? அல்லது சுஷ்மிதாவை அடித்துக் கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டு சீனிவாஸ் நாடகமாடினாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் சீனிவாசை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X