

புதுடெல்லி,
வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு பாட்னா ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைநீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்த நீதிபதிகள், அவர் போலீசார் முன்னிலையில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வரதட்சணை மரணம் போன்ற மிகத் தீவிரமான குற்ற வழக்குகளில், ஐகோர்ட்டு தனது விருப்புரிமையை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வரதட்சணை மரணங்கள் உண்மையில் ஒரு ஆழ்ந்த அவமானமும், மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் மீதான கடுமையான மீறலைக் குறிக்கும் ஒரு முக்கிய சமூக தீமையும் ஆகும்.
வரதட்சணைக்கு சட்டரீதியான தடைகள் இருந்தபோதிலும், இந்த நடைமுறை ஆயிரக்கணக்கான பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்களுக்குத் தொடர்ந்து காரணமாகி வருகிறது.
பெரும்பாலும் மணமகன் வீட்டார் பணம் அல்லது விலைமதிப்புள்ள பொருட்களை கேட்டு பேராசையுடன் வைக்கும் கோரிக்கைகளால், அப்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். வரதட்சணை மரணங்கள் சமூகத்திற்கு ஒரு பெரும் களங்கமாகும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறி உள்ளனர்.