

ஜல்காவன்,
கோவா கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றுள்ள டவ்தே புயல், நாளை மறுநாள் (18ந்தேதி) அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த புயலால், கேரளா முழுவதும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா முழுவதும் வரும் 17ந்தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் டவ்தே புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 73 கிராமங்கள் பாதிப்படைந்து உள்ளன.
இந்த புயலானது, கோவாவில் இருந்து மராட்டியம் வழியே குஜராத் சென்றடைகிறது. இந்நிலையில், புயலால் மராட்டியத்தின் ஜல்காவன் நகரில் அஞ்சல்வாடி பகுதியில் குடிசை வீடு ஒன்றின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 17 மற்றும் 12 வயதுடைய 2 சகோதரிகள் பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் அவர்களின் தாயாருக்கு படுகாயங்கள் ஏற்பட்டன. அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.