4 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 95 லட்சம் பேர் நீக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
புதுடெல்லி,
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
கடந்த மாதம் 4-ம் தேதி தொடங்கிய இந்த பணி நேற்று முந்தினம் நிறைவு பெற்றது. ஒரே மாதத்தில் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்கள் முழு வீச்சில் விநியோகிக்கப்பட்டன. 2002 முதல் 2005 வரையிலான எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், கேரளா மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரியவந்தது
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், 3.10 லட்சம் வாக்காளர்களில், 64 ஆயிரம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல் கேரளாவில், 2.78 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில் 24.08 லட்சம் பேரின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
சத்தீஸ்கரில், 2.12 கோடி வாக்காளர்களில், 27.34 லட்சத்துக்கும் மேலான பெயர்கள் நீக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை, 5.74 கோடி பேரில், 42.74 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இறுதிப் பட்டியல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.






