சமையல் எண்ணெய் இறக்குமதி வரி அதிரடி குறைப்பு - மத்திய அரசு உத்தரவு

கச்சா சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் இறக்குமதி
Published on: 

புதுடெல்லி,

இல்லத்தரசிகளுக்கு பண்டிகைக்கால பரிசு அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலைவாசி உயர்வு

4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போர், ஈரான் மீதான அமெரிக்கா போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு, மற்ற மூலப்பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்டவை காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் உள்ள பொதுமக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பண வீக்கம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து மத்திய அரசு அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து இந்திய மக்கள் அதிகளவில் பாதிக்காத வண்ணம் தடுத்து வருகிறது.

முழுமையான வரிவிலக்கு

அந்த வகையில் சமையல் எண்ணெய்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை கணிசமாகக் குறைத்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்படாத கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உடனடி அமல்

மேலும், கச்சா சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 32.5 சதவீதத்தில் இருந்து 22.5 சத வீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான வரி 32.5 சத வீதத்தில் இருந்து 27.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விகிதங்கள் நேற்று (செப்டம்பர் 24-ந்தேதி) முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் இந்த அதிரடி வரி குறைப்பு நடவடிக்கை காரணமாக, வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செலவு பெருமளவு குறையும்.

இதன் எதிரொலியாக, உள்ளூர் வெளிச்சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் விலை லிட்டருக்கு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com