தோல்வியில் முடிந்த கனவு; டீக்கடை போட்ட இளம்பெண்ணின் போராட்ட பின்னணி...

பீகாரில் அரசு தேர்வில் வெற்றி பெறும் கனவு நீர்த்து போனாலும் மனம் தளராமல் இளம்பெண் டீக்கடை நடத்தும் முடிவை எடுத்துள்ளார்.
தோல்வியில் முடிந்த கனவு; டீக்கடை போட்ட இளம்பெண்ணின் போராட்ட பின்னணி...
Published on

பாட்னா,

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா குப்தா (வயது 24). உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக வங்கி போட்டி தேர்வுகளில் பங்கேற்றுள்ளார். கடின உழைப்பு கொடுத்தும் அவரது முயற்சியில் பலனில்லை. அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தனது கனவு ஈடேறாத சூழலில் அவர் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இதன்படி, பாட்னா நகரில் மகளிர் கல்லூரி அருகே டீக்கடை (தேநீர் விற்பனை) ஒன்றை அமைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, எனது இந்த வியாபாரம், ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தினை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதியாக நான் பார்க்கிறேன்.

இந்த கல்லூரியின் மாணவிகளே என்னுடைய வாடிக்கையாளர்கள். குஜராத்தின் ஆமதாபாத்தில் எம்.பி.ஏ. படித்து கொண்டே டீக்கடை நடத்தும் பிரபுல் பில்லோர் என்பவரே எனது ரோல்மாடல். அவரது வீடியோக்களை பார்த்து அதில் இருந்து கற்று கொண்டேன்.

ஆனால், ஒரு சிறிய கடை அமைப்பது என்பது பிரியங்காவுக்கு பெரும் சவாலாகவே இருந்துள்ளது. பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற பல வங்கிகளுக்கும் அலைந்து, திரிந்தும் யாரும் கடனளிக்க முன்வரவில்லை.

ஏறக்குறைய 2 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைய, அவரது நண்பர்களில் ஒருவரான ராஜ் பகத் என்பவர் ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார்.

அதில், ரூ.12,500க்கு டீக்கடை மற்றும் அதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். இந்த டீக்கடை அமைப்பதற்கு முன் பலரும் அவரை ஊக்கமிழக்க செய்யும் வகையிலேயே பேசியுள்ளனர். ஆனால், கனவை உண்மையாக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டேன் என அவர் கூறுகிறார்.

இந்த டீக்கடையில், மசாலா டீ, குல்ஹாத் டீ, பான் டீ மற்றும் சாக்லேட் டீ என வகை வகையாக தயாரித்து பிரியங்கா விற்பனை செய்து வருகிறார். இவற்றின் விலை ஒரு கோப்பை ரூ.15 முதல் ரூ.20 என்ற அளவில் உள்ளது. வாடிக்கையாளர்களும் அதிக அளவில் வருவது அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com