அதானி விவகாரம், ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையில் ஊர்வலம் - தர்ணா

அதானி விவகாரம் மற்றும் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர். தர்ணா போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது.
அதானி விவகாரம், ராகுல்காந்தி பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையில் ஊர்வலம் - தர்ணா
Published on

ஆலோசனை

நாடாளுமன்ற கட்டிடத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதானி விவகாரம், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு ஆகிய பிரச்சினைகளை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது பற்றி விவாதிப்பதற்காக இக்கூட்டம் நடந்தது.

காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, ஆம் ஆத்மி, ம.தி.மு.க., முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் பிரிவு), புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற கூட்டங்களை புறக்கணித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கற்றனர்.

சோனியாகாந்தி

இந்த கூட்டத்தை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூடினர். சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அதானி, ராகுல்காந்தி பதவி பறிப்பு விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பல்வேறு எம்.பி.க்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் கருப்பு உடை அணிந்திருந்தனர்.

பேரணி

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய்சவுக் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். கருப்பு உடையுடனே பலரும் வந்தனர். 'சத்யமேவ ஜெயதே' 'ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்' என்று எழுதப்பட்ட பேனர்களையும், பதாகைகளையும் பிடித்திருந்தனர். விஜய்சவுக்கை அடைந்தவுடன், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் பங்கற்றனர்.

தர்ணா போராட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

அதானியின் சொத்து மதிப்பு, கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்திருப்பது ஏன்? எத்தனை தடவை அதானியை வெளிநாடுகளுக்கு உங்களுடன் அழைத்து சென்றிருக்கிறீர்கள்?

பயப்படுவது ஏன்?

அதானிக்கு எதிராக கட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமரால் பதில் அளிக்க முடியவில்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பயப்படுவது ஏன்? எனவே, ஏதோ தவறு நடக்கிறது என்று அர்த்தம். ராகுல்காந்தியை இழிவுபடுத்த நீங்கள் விரும்புகிறீர்கள். அதனால்தான் கோலாரில் பேசியதற்கான வழக்கை குஜராத்துக்கு மாற்றினீர்கள். இன்று ஜனநாயகத்துக்கு கருப்பு நாள்.

பிரதமர் மோடி, ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டி வருவதால், கருப்பு உடை அணிந்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com