குடும்பத் தகராறில் மனைவி உட்பட 6 பேரை கொன்ற டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

மனைவி, அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை டிரைவர் கொலை செய்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறில் மனைவி உட்பட 6 பேரை கொன்ற டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்
Published on: 

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரின் ஸ்ரீராம்புரா பகுதியை சேர்ந்தவர் சேகர். வாடகைக் கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில், தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

குடும்பத் தகராறு

இதற்கிடையே, குடும்பத் தகராறு காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சேகர் மேல் உள்ள கோபத்தில் மனைவி சுனிதா, தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், நீ உனது பெற்றோர் வீட்டிற்கு செல்லக்கூடாது என சேகர் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்துள்ளது. சுனிதாவுக்கு அவரது தாயும், சகோதரர்களும் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளனர். இது சேகருக்கு பிடிக்கவில்லை.

கொலை செய்ய திட்டம்

எனவே, தனது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய சேகர் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி முதலில் முதலில் தனது மனைவி சுனிதாவை கிரைண்டர் அரைவை கல்லால் அடித்துக் கொலை செய்து, அவரது உடலைத் துணியில் சுற்றி, நந்தி மலைக்கு அருகில் உடலை வீசியுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க, சுனிதாவின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, அவர் சுற்றுலா சென்றிருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

7 கொலைகள்

அடுத்த நாள், தனது மைத்துனர்களான சிவகுமார் மற்றும் சங்கரை ஒரு விருந்துக்காகத் தனது வீட்டிற்கு அழைத்து, அவர்களையும் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார். மேலும், அவர்களது மனைவிகளான திவ்யா மற்றும் நளினி, தனது மாமியார் ரூபவதி மற்றும் சிவகுமாரின் ஏழு வயது மகன் புனீத் ஆகியோரையும் கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களது உடலை காரில் கொண்டுசென்று வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.

போலீசார் அதிர்ச்சி

குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போனதால் சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர் ஒருவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தில் பேரில் சேகரை பிடித்து விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த கொலைகளை செய்ததாக போலீசிடம் சேகர் தெரிவித்துள்ளார். சேகரின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சேகரை கைதுசெய்த போலீசார், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை கண்டிபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X