ஒரே குடும்பத்தில் 7 பேரை கொடூரமாக கொன்ற டிரைவர்; ஆவி பீதியில் தவிப்பதாக வாக்குமூலம்

கொலை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன.
ஒரே குடும்பத்தில் 7 பேரை கொடூரமாக கொன்ற டிரைவர்; ஆவி பீதியில் தவிப்பதாக வாக்குமூலம்
Published on: 

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக், 60-வது கிராஸ், பாஷி யம் சர்க்கிளில் வசித்து வந்தவர் இந்துசேகர்(வயது 52), கார் டிரைவர். இவரது மனைவி சுனிதா(40). இந்த தம்பதியின் 17 வயது மகள் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. படித்து வருகிறார்.

இந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து விவகாரத்தில் மனைவி சுனிதா, மாமியார் ரூபவதி, மைத்துனர்கள் சிவக்குமார், சங்கர் மற்றும் சிவக்குமாரின் மனைவி திவ்யா, மகன் புனித், சங்கரின் மனைவி நளினி ஆகிய 7 பேரையும் இந்துசேகர் தீர்த்துக்கட்டினார்.

இதுதொடர்பாக ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்துசேகர், அவரது மகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்துசேகரால் கொல்லப்பட்ட சுனிதா, ரூபவதி ஆகியோரின் உடல்கள் தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியிலும், மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் சிவக்குமார், திவ்யா ஆகியோரின் உடல்களும், என பல்வேறு இடங்களில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

7 பேரை கொன்ற, இந்துசேகருக்கு எதிரான சாட்சிகளை திரட்டும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்னர். இதற்காக அவர் தனது காரில் உடல்களை எடுத்து செல்லும் வீடியோ காட்சிகள், செல்போன் சிக்னல்கள் அடங்கிய தகவல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாட்சிகளையும் போலீ சார் திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், போலீசில் காவலில் இருக்கும் இந்து சேகர் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

மனைவி சுனிதாவை கொலை செய்த அன்று அவருக்கும், எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘உன்னால் தான் என் நிம்மதி போனது’ என்று கூறி, சுனிதாவை கண்மூடித்தனமாக தாக்கினேன்; ஆட்டு கல்லால் அடித்தேன். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை குளியல் அறைக்குள் இழுத்து சென்றேன். சிறிது நேரத்தில் சுனிதா இறந்து விட்டார். அவரது உடலை பார்த்து எனக்கோ, மகளுக்கோ ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை.

இதேபோல சுனிதாவின் அம்மா, இரண்டு சகோதரர்கள், அவரது மனைவியர் மற்றும் 7 வயது சிறுவன் என ஆறு பேரையும், அடுத்தடுத்த நாட்களில் வீட்டுக்கு வரவழைத்து ஆட்டு கல்லால் அடித்து கொன்று, உடல்களை மலைப் பகுதியில் வீசி வந்தோம். ஆனால் வீட்டிற்கு வந்த பின், அவர்கள் ஆவியாக வருவர் என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. இரவில் துாக்கம் இல்லாமல் தவித்தேன். வெளியே ஏதாவது சத்தம் கேட்டால் கூட பயமாக இருந்தது. கடவுள்கள் பெயரை உச்சரித்தபடி வீட்டிற்குள் அங்கும், இங்குமாக நடமாடினேன்.

ஆனால், என் மகள் எதற்கும் பயப்படவில்லை. ‘உலகில் ஆவி என்று எதுவும் இல்லை’ என்று கூறி, என்னை தைரியப்படுத்தினார். ஆனாலும் மன நிம்மதிக்காக கோவில், கோவிலாக சுற்றினேன். ஆவியால் எனக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். இப்போதும் கூறுகிறேன்; ஏழு பேரை கொன்றதில் எனக்கு துளி கூட வருத்தம் இல்லை. இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

X