பஞ்சாபில் நடைபெற்ற போதைப்பொருட்கள் விழிப்புணர்வு மாரத்தான் - 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

மாரத்தானில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாரத்தான்
Published on

பட்டிண்டா,

பஞ்சாபில் போதைபொருட்கள் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்

பஞ்சாப் மாநிலத்தின் மிகப்பெரிய மாரத்தான் போட்டிகளில் ஒன்றான ‘யூத் ரன் பஞ்சாப் 2026’ பட்டிண்டா நகரில் உற்சாகமாக நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த 5 கி.மீ. ஓட்டப்பந்தயம், உடல்நலம் மேம்பாடு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்த மாரத்தானில் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 19 வயதுக்குட்பட்டவர்கள் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றியாளர்களுக்கு ரூ.11 ஆயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு

இந்த மாரத்தான் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். ”போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க இளைஞர்கள் முன்வந்து வழிநடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இது புதிய பஞ்சாபின் அடையாளம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் பங்கேற்ற இந்த மாரத்தான், பஞ்சாபில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com