

ஐதராபாத்,
ஹைதராபாத்தில் உள்ள பள்ளியில் போதைப்பொருள் விநியோகம் குறித்து கலால் துறையினர் நடத்திய விசாரணையில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் மகன்கள், தொழிலதிபர்களின் மகன்கள் போதைப்பொருளை உபயோகித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி 19 பேரை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்களின் தொலைபேசியில் தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் இருந்ததால் இது குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கடந்த 19ம் தேதி முதல் இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, கலை இயக்குனர் சின்னா ஆகியோரிடம் கலால் துறை விசாரணை குழு விசாரணை நடத்தியது.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக விளங்கும் ரவிதேஜா நேற்று விசாரணைக்குழு முன் ஆஜரானார். கிட்டதட்ட 10 மணி நேரமாக அவரிடம் கலால்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்புடைய சிலரது தொலைபேசிகளில் நடிகர் ரவிதேஜாவின் செல்போன் எண்ணும் கால் லிஸ்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ரவிதேஜாவின் கார் ஓட்டுநர் ஸ்ரீனிவாச ராவ் இன்று சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜரானார். ஸ்ரீனிவாச ராவிடம் கலால்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை, சிறப்பு விசாரணைக்குழுவால் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் 12 பேர் விசாரணைக்குள்ளாகியுள்ளனர்.