பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்: இளம்பெண் கைது

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு ரூ.2 கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில், இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தல்: இளம்பெண் கைது
Published on

கோழிக்கோடு,

கோழிக்கோடு புதியங்காடி அருகே எடக்கல் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கடந்த மாதம் 19-ந் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோழிக்கோடு மாநகர போலீஸ் துணை கமிஷனர் அணுஜ் பலிவால் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், வெள்ளையில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் 2 கிலோவுக்கு மேல் எம்.டி.எம்.ஏ. என்ற உயர்ரக போதைப்பொருள், 70 எல்.எஸ்.டி. ஸ்டாம்புகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும். போலீசார் வருவதை அறிந்து வீட்டில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர். வீட்டில் இருந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து, 2 பேரை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த ஷைன் ஷாஜி (வயது 23), ஆல்வின் செபாஸ்டின் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ஷைன் ஷாஜி மற்றும் குமுளியில் தலைமறைவாக இருந்த ஆல்வின் செபாஸ்டின் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஷைன் ஷாஜியை போலீசார் காவலில் எடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய ஏஜென்டாக செயல்பட்டது ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா பகுதியை சேர்ந்த ஜூமி (24) என்பதும், அவர் மூலம் ஷைன் ஷாஜி பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ்சில் கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும், கோவா, பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து ஜூமியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com