

ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரில் அரசின் தீவிர முயற்சியால் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கூறும்போது, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காணப்படும் போதை பொருட்கள் விற்பனையானது, நேரடியாக பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் பலர் போதை பொருட்களின் பிடியில் உள்ளனர். அதன் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இது ஒரு தீவிர விசயம். போதை பொருட்கள் வெறும் சமூக விவகாரம் மட்டுமின்றி, இந்த பகுதியின் ஸ்திரத்தன்மையை பாதிக்க செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு வகையான போர் கருவியாக பயன்டுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதனை எதிர்கொள்ள ஏப்ரல் 11-ந்தேதி ஒரு சிறப்பு 100 நாள் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, போதை பொருள் வினியோக சங்கிலியை உடைத்தல், ஒவ்வொரு தனிநபருக்கும் சென்றடையும் வகையில் அடிமட்ட அளவில் கல்வி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முறையில் அவர்களை குணப்படுத்துதல் ஆகிய 3 முக்கிய அணுகுமுறைகளை அரசு நிர்வாகம் கையாண்டு வருகிறது.
போதையில்லா ஜம்மு-காஷ்மீரை உருவாக்க நாளை ஸ்ரீநகரில் மெகா பாதயாத்திரை ஒன்று நடைபெற உள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான, சுகாதாரம் நிறைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்கி தருவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இதில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.