பெங்களூருவில் ரூ.3.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

வழக்கில் தொடர்புடைய 2-வது நபரை போலீசார் கடந்த 4-ந்தேதி கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக அசோக்நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், கடந்த டிசம்பர் 31-ந்தேதி ஓசூர் ரோடு அருகே ஒரு நபரை கைது செய்தனர்.
அந்த நபரிடம் இருந்து 2 கிலோ 480 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, போதைப்பொருள் விற்பனையில் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய 2-வது நபரை பையப்பன்ஹள்ளி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் இருந்து சுமார் 720 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக இந்த வழக்கில் ரூ.3.5 கோடி மதிப்பிலான 3.2 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






