

புதுடெல்லி:
உலக வனவிலங்கு நிதியம் (டபிள்யுடபிள்யுஎஃப்) நடத்திய ஆய்வில், 2050 க்குள் இந்தியாவில் அமைந்துள்ள 30 நகரங்கள் கடுமையான நீர் அபாயங்களை சந்திக்க நேரிடும் என்று தெரிய வந்துள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளில் 100 நகரங்கள் மிகப்பெரிய நீர் அபாயங்களை சந்திக்கக்கூடும் என்ற உலக வனவிலங்கு நிதியம் நீர் இடர் வடிகட்டி ஆய்வு கூறியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை அபாயங்களுக்கு உள்ளாகக்கூடிய நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் 30 நகரங்களும் இடம் பெற்று உள்ளன. டெல்லி, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஈரநில பாதுகாப்பு ஆகியவை இந்தியாவில் நன்னீர் அமைப்புகள் அப்படியே இருப்பதை உறுதி செய்ய எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் குறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தண்ணீரைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், நீர் பயன்பாட்டைக் குறைப்பது கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அம்சமாகும்.
கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பல நகரங்கள் நீர் நெருக்கடியில் போராடி வருவதாக லைவ் மிண்ட் தெரிவித்துள்ளது. மராட்டியம் முதல் தமிழ்நாடு வரை, நிலத்தடி நீர் குறைந்து உள்ளது. உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மாநிலங்கள் தங்கள் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்பட்டு வருகின்றன.
உலக வனவிலங்கு நிதிய இந்தியாவின் திட்ட இயக்குநர் செஜல் வோரா கூறும் போது
நகர்ப்புற நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுப்பது போன்றவை தீர்வுகளை வழங்கக்கூடும். நகரங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை மீண்டும் உருவாக்கிகற்பனை செய்ய இது எங்களுக்கு வாய்ப்பாக உள்ளது என கூறினார்.