

இந்தியாவின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாது என்ற நிலையை நோக்கி செல்லவிருக்கிறது. ஏர்இந்தியா எரிபொருள் வாங்கியதற்கான தொகை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த 200 நாட்களாகவே ஏர்இந்தியா எரிபொருள் செலவுக்கான பணத்தை செலுத்தவில்லை. எரிபொருள் செலவு ரூ. 4,500 கோடியையும் திருப்பி செலுத்தவில்லை.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை.
எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக 90 நாட்கள் வரை தான் கடன் வழங்கும். ஏர் இந்தியாவுக்கு கடன் வழங்கி 200 நாட்கள் தாண்டியும் திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து ராஞ்சி, மொகாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புனே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், லை 9.15 மணிக்கு 300 பயணிகளுடன் கொச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்படுவதாக இருந்தது.
ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளை செய்யாததால், அது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. உடனே, பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்தனம்திட்டா காங்கிரஸ் எம்.பி. அன்டோ அந்தோணியை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். அன்டோ அந்தோணி, மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி ஹர்தீப்சிங் பூரியையும், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானையும் தொடர்பு கொண்டு பேசினார். 2 மந்திரிகளின் தலையீட்டுக்கு பிறகு பிரச்சினை தீர்ந்தது. 4 மணி நேரம் தாமதமாக, பகல் 1.09 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.