பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை துரை வைகோ இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்து பேசி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ரஷியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட 126 பேரை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி 15 கட்சிகளை சேர்ந்த 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமர் மோடியிடம் துரை வைகோ எம்.பி. வழங்கினார்.
முன்னதாக ரஷியாவில் சிக்கி தவிக்கும் கடலூர் மருத்துவ மாணவர் கிஷோரை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ரஷியாவில் மருத்துவம் படித்து வரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் பொய் வழக்கில் சிறையில் வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், வலுக்கட்டாயமாக உக்ரைனுக்கு எதிரான போருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






