டோக்லாமில் படைகுவிப்பின்போது சீனத் தூதரை கட்டிப் பிடித்தது ஏன்? ராகுல்காந்திக்கு பிரதமர் ஆவேச கேள்வி

டோக்லாமில் படைகுவிப்பின்போது சீனத் தூதரை கட்டிப்பிடித்தது ஏன்? என்று ராகுல்காந்திக்கு, பிரதமர் மோடி ஆவேசமாக கேள்வி விடுத்தார்.
டோக்லாமில் படைகுவிப்பின்போது சீனத் தூதரை கட்டிப் பிடித்தது ஏன்? ராகுல்காந்திக்கு பிரதமர் ஆவேச கேள்வி
Published on

புஜ்,

குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை குஜராத்தில் தொடங்கினார்.

பின்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கட்ச் மாவட்டம் லக்பாத் தாலுகா மாதானவ் மத் என்னும் இடத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மா ஆஷாபுரா அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அந்த கோவிலில் சுமார் 20 நிமிட நேரத்தை பிரதமர் மோடி செலவிட்டார்.

பின்னர், அங்கிருந்து புஜ் நகருக்கு சென்று தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கும், டுவிட்டரில் தன்னைப் பற்றி கிண்டலடித்ததற்கும் தக்க பதிலடி கொடுத்தார்.

ஹபீஸ் சயீத்தை (2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்) பாகிஸ்தான் விடுதலை செய்துவிட்டது. எனவே நீங்கள் ஜனாதிபதி டிரம்பை இன்னும் நிறைய தழுவிடவேண்டும் என்று அண்மையில் டுவிட்டர் மூலம் ராகுல்காந்தி கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு ஆவேசமாக பதில் அளித்த மோடி, டோக்லாம் எல்லையில் இந்தியா- சீனா இடையே பதற்றம் நிலவியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் கேலி செய்தார்.

அவர் பேசும்போது, டோக்லாம் பிரச்சினையின்போது, நமது ராணுவ வீரர்கள் 70 நாட்களுக்கும் மேலாக சீன படைகளுக்கு எதிராக இரவு பகலாக வைத்த கண் வாங்காமல் விழித்து இருந்தனர். அந்த நேரத்தில் இங்குள்ள சீன தூதரை நீங்கள் சந்தித்து கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினீர்களே, அது ஏன்?... யாருடைய நலனுக்காக இதைச் செய்தீர்கள்? உங்களைத்தான் (ராகுல்காந்தி) கேட்கிறேன் என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை மோடி ஆதரித்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com