‘தொடக்கத்திலேயே கண்டறிந்தால் கொரோனாவை குணப்படுத்தலாம்’ - கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தொடக்கத்திலேயே கண்டறிந்தால் கொரோனாவை குணப்படுத்தலாம் என கூறியுள்ளார்.
‘தொடக்கத்திலேயே கண்டறிந்தால் கொரோனாவை குணப்படுத்தலாம்’ - கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
Published on

போபால்,

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் மத்திய பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் (வயது 61) கொரோனா தொற்றுக்கு ஆளானார். கொரோனாவிடம் சிக்கிய முதல் முதல்-மந்திரி இவர் ஆவார்.

இவருக்கு தொற்று இருப்பது கடந்த 25-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. உடனே போபாலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவர் வேகமாக உடல்நலம் தேறி வருகிறார்.

இதைத்தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் முதல் முறையாக தனது மந்திரிசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது தனது கொரோனா அனுபவங் களை அவர் சக மந்திரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவையில்லை. எச்சரிக்கையாக இருந்தாலே அதை கட்டுப்படுத்தி விடலாம். தொற்றை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் போல கொரோனாவையும் குணப்படுத்தி விடலாம். ஆனால் இந்த தொற்று ஒருவரின் நுரையீரலுக்குள் சென்றுவிட்டால் சிக்கலாகி விடும்.

எனவே கொரோனா அறிகுறி தென்படும் ஒருவர் உடனடியாக ஒரு டாக்டரை அணுக வேண்டும். அவரிடம் தனது உடல்நிலை குறித்து தெரிவித்து தொற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எனக்கு கடந்த திங்கட்கிழமை முதல் காய்ச்சலோ, இருமலோ எதுவும் இல்லை. அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

தற்போது எனது துணிகளை நானே துவைத்துக்கொள்கிறேன். மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதால் நானே துவைக்கிறேன். இதனால் கொஞ்ச நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது கைக்கும் சவுகரியமாக உள்ளது. எனது முட்டியும் சரியாக மடக்க முடிகிறது. எனக்கான தேநீரை நானே போட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

கடந்த 25-ந்தேதி முதல் சிவராஜ் சிங் சவுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், மாநிலத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து காணொலி காட்சி மூலம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கொரோனாவில் இருந்து மீண்டு வருவது மாநில அரசு வட்டாரங்களில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com