உக்ரைனில் அமைதி, வளர்ச்சி திரும்ப விரும்புகிறேன்: பிரதமர் மோடி


உக்ரைனில் அமைதி, வளர்ச்சி திரும்ப விரும்புகிறேன்: பிரதமர் மோடி
x

சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

புதுடெல்லி:

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் நேற்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்திருந்தார். ஜெலன்ஸ்கி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் எனத் தான் நம்புவதாகவும் கூறியிருந்தார்.இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜெலன்ஸ்கிக்கு, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அதில் பதிவிட்டிருப்பதாவது: “உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா - உக்ரைன் இடையேயான நெருங்கிய உறவை ஏற்படுத்துவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை நான் மதிக்கிறேன். உக்ரைனின் எதிர்காலம் அமைதியும் வளர்ச்சியும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, இஸ்ரேல் பிரதமருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா - இஸ்ரேல் இடையேயான நட்புறவு தொடர்ந்து செழிக்கட்டும். அமைதி, வளர்ச்சி மற்றும் நமது மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நல்லுறவை இரு நாடுகளும் மேலும் வலுப்படுத்தி ஆழப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

1 More update

Next Story