கொரோனா எதிரொலி; நாடு முழுவதும் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவர்கள் இடையே ஈஸ்டர் பண்டிகை இன்று களையிழந்து காணப்பட்டது.
கொரோனா எதிரொலி; நாடு முழுவதும் களையிழந்த ஈஸ்டர் பண்டிகை
Published on

புதுடெல்லி,

கிறிஸ்தவர்களின் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஈஸ்டர் பண்டிகை. கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் 14ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன. கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் புனித வெள்ளி அன்று, கொரோனா எதிரொலியாக நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன.

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் பாளையம் பகுதியில் அமைந்த புனித ஜோசப் பெருநகர ஆலயம், பெருங்கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக மூடப்பட்டது.

மராட்டியத்தின் மும்பை நகரில் மஹிம் பகுதியில் உள்ள புனித மைக்கேல் கிறிஸ்தவ ஆலயம், டெல்லியில் கோல் தக் கானா பகுதியருகே அமைந்துள்ள தூய இருதய கிறிஸ்தவ ஆலயங்களிலும் புனித வெள்ளி தினத்தில் நடைபெற இருந்த வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு, ஆலயமும் மூடப்பட்டு இருந்தது.

ஆலய வாசலில், கொரோனா வைரஸ் பாதிப்பினை முன்னிட்டு அனைத்து மதசடங்குகளும் மற்றும் பிற வழிபாடுகளும் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதேபோன்று நாடு முழுவதும் ஞாயிற்று கிழமையான இன்று ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெறும். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

எனினும், கொரோனா எதிரொலியாக மும்பையில் பந்த்ரா நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் இன்று மூடப்பட்டு இருந்தது. பெருமளவில் கூட்டம் கூடுவதும் தவிர்க்கப்படும் வகையில் பிரார்த்தனைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு பந்த்ரா நகரில் உள்ள கலாநகர் பகுதி மூடப்பட்டு போலீசாரால் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று மும்பை மாஹிம் பகுதியில் உள்ள புனித மைக்கேல் கிறிஸ்தவ ஆலயமும் மூடப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள புனித ஜோசப் கிறிஸ்தவ ஆலயம், டெல்லியில் கோல்தக் கானா பகுதியருகே அமைந்த தூய இருதய ஆலயம் ஆகியவையும் மூடப்பட்டு உள்ளன. சில ஆலயங்களில் பேராயர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை.

சில ஆலயங்களின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையில், சமூக தொடர்பு வழியே வைரஸ் பரவ கூடும். அதனால் பெருங்கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பிரார்த்தனை செய்யுங்கள். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என தெரிவிக்கப்பட்டு உளளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com