முலாயம் சிங் தொகுதியில் இடைத்தேர்தல்

வெவ்வேறு மாநிலங்களின் 5 எம்.எல்.ஏ. தொகுதிகளுடன் சேர்த்து முலாயம் சிங்கின் எம்.பி. தொகுதியில் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
முலாயம் சிங் தொகுதியில் இடைத்தேர்தல்
Published on

முலாயம் சிங் எம்.பி. தொகுதி

சமீபத்தில் உடல்நல குறைவால் மரணம் அடைந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார். அவரது மறைவால் அந்த தொகுதி காலியானது.

அந்த எம்.பி. தொகுதிக்கும், இதுபோல வெவ்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டசபை தொதிகளுக்கும் டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இந்த தேதியில் குஜராத் சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை தொகுதிகள்

இடைத்தேர்தல் நடக்க உள்ள சட்டசபை தொகுதிகள் வருமாறு:-

* உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் சட்டசபை தொகுதி. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் வெறுப்புணர்வு பேச்சு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால் இந்த தொகுதி காலியானது.

* ராஜஸ்தான் மாநிலம், சர்தார் சஹார் தொகுதி. இங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வர்லால் சர்மா உடல்நல குறைவால் மரணம் அடைந்தால், தொகுதி காலியானது.

* ஒடிசா மாநிலம், பதம்பூர் தொகுதி. பிஜூ ஜனதாதளம் எம்.எல்.ஏ. பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா மரணம் அடைந்ததால், இந்த தொகுதி காலியானது.

* பீகார் மாநிலம், குர்கானி தொகுதி. ராஷ்டிரீய ஜனதாதளம் எம்.எல்.ஏ. அனில்குமார் சஹனி, மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதி காலியானது.

* சத்தீஷ்கார் மாநிலம், பானுபிரதாப்பூர் தொகுதி. இங்கு காங்கிரஸ் எம்.எல்..ஏ. மனோஜ் சிங் மாண்டவி மறைவால் தொகுதி காலியாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கை

மெயின்புரி மக்களவை தொகுதியிலும், 5 சட்டசபை தொகுதிகளிலும் டிசம்பர் 5-ந் தேதி நடக்கிற இடைத்தேர்தலில் பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறபோது, சேர்த்து எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com