இலவசங்களை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது - காங்கிரஸ்

இலவசம் வழங்குவது தொடர்பான வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது என்று காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தேர்தல்களில் வாக்காளர்களை கவர இலவசங்கள் தருவதாக சில அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாகவும், இந்த இலவச கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி சமீபத்தில் பேசி இருந்தார்.

இதுபற்றி விவாதம் நடத்துவது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மேலும், இலவசம் வழங்கும் வாக்குறுதிகளை ஒழுங்குபடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களை அரசியல் கட்சிகள் தெரிவிப்பது கட்டாயம் என்று திருத்தம் கொண்டு வருவது பற்றியும் கருத்து கேட்டது.

காங்கிரஸ் பதில்

இந்தநிலையில், தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் கட்சி நேற்று பதில் அளித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது துடிப்பான ஜனநாயக முறையின் அம்சங்களில் ஒன்று. இது, வாக்காளர்களின் அறிவுக்கூர்மை, பகுத்தறிவு ஆகியவற்றை சார்ந்தது. அவர்களின் புத்திக்கூர்மையை குறைத்து மதிப்பிடக்கூடாது.

தேர்தல் வாக்குறுதிகளை அலசி ஆராய்ந்து, அவற்றை ஏற்றுக்கொள்வதா? நிராகரிப்பதா? என்பதை வாக்காளர்களே தீர்மானித்துக்கொள்வார்கள்.எனவே, தேர்தல் கமிஷனுக்கோ, அரசாங்கத்துக்கோ, ஏன் கோர்ட்டுகளுக்கோ கூட இப்பிரச்சினையை நியாயப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ அதிகாரவரம்பு கிடையாது. எனவே, தேர்தல் கமிஷன் இதில் இருந்து விலகி இருப்பது நல்லது.

கடந்த காலங்களில் தேர்தல் கமிஷன் இத்தகைய அதிகாரத்தை பயன்படுத்தாமல் கட்டுப்பாடுடன் இருந்துள்ளது. தேர்தல் பிரசார புகார்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நேர்மையான தேர்தல்

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலவச கலாசாரம் குறித்து பிரதமர் பிரச்சினை எழுப்பிய பிறகு, தேர்தல் கமிஷன் இதை கையில் எடுத்துள்ளது. ஏழைகள் மற்றும் நலிந்தோரின் நலன்களை பாதுகாப்பதும், அவர்களின் உயர்வுக்காக திட்டங்கள் வகுப்பதும் அரசாங்கத்தின் கடமை. அதை இலவசம் என்று திரிக்கக்கூடாது.

ஏற்கனவே உள்ள சட்டங்களை தேர்தல் கமிஷன் முறையாக அமல்படுத்தி, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த வேண்டும். உடனடி கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பிரச்சினைகள் நிறைய உள்ளன என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com